100th post – Guest blog by Dr.N.Kannan


This is a very special occasion for me. The 100th post of Karka Nirka blog. And I have decided to give a treat to all my readers. Hence a guest post and there no better person to write on this Blog than Dr. N.Kannan. Dr.Kannan is the Director of Tamil Heritage Foundation and also a poet and an author(http://www.e-mozi.com/articles/biosketch.html,http://freenet-homepage.de/bliss/bio_english.html) . To me he is one important person associated with this blog indirectly. I post my blogs in MinTamil group where Dr.Kannan is a moderator. When I started posting in MinTamil at times I would get brilliant insights from Dr.Kannan which never occured to me from Dr.Kannan. He and other members in MinTamil have posted valuable comments and reviews on the post and have encouraged me to write more on Sangam Tamil. I couldn’t find any better person than Dr.Kannan to be the person to be part of my 100th post. Dr.Kannan asked me wether he could write in Tamil and I gleefuly accepted since I thought atleast the 100th post in a blog which speaks the greatness of Tamil to be in Tamil. For non Tamil readers, I will translate this work soon.
Finally I would like to thank Dr.Kannan for accepting to write a guest post for me in his very busy schedule.
————————————————————————————–
மறை பொருள் மொழி தமிழ்
நா.கண்ணன்
சங்கம் என்றவுடன் தமிழர்களுக்கு ஓர் புத்துணர்ச்சி வருகிறது. காரணம் அக்காலக்கட்டத்தில் தமிழனுக்கு அதிக சுதந்திரம் இருந்தது. இப்போது உடும்புப் பிடியாய் நம்மையெல்லாம் (ஆண்-பெண் இருவருக்கும் சரி) கட்டி வைத்திருக்கும் மத்திமவர்க்க விழுமியங்கள் சமூகத்தில் நிலைபெறாத காலம். இப்போது போல் இல்லாமல் சூழல் வனப்பு நிரைந்திருந்த காலம். களிறும், பிடியும்; பசுவும் காளையும், அளகும், சேவலும் இணைந்து அலைந்து திரிந்த காலம். சூழல் தரும் மயக்கம் காதலன்,
காதலிக்கு ஒட்டிக் கொள்ளாதா என்ன?
அன்னாய் வாழிவேண் டன்னைநம் படப்பைத்
தேன்மயக்கு பாலினு மினிய வவர்நாட்
டுவலைக் கூவற் கீழ
மானுண் டெஞ்சிய கலிழி நீரே – ஐங்குறுநூறு 203
கபிலர் தரும் காட்சியைப் பாருங்கள். தலைவனிடம் போய்த் திரும்பிய தலைவியை நோக்கி அவள் தோழி, ” என்னம்மா? உங்க தலைவன் ஊரில் நீர் இனிமையாக இருந்ததா? எப்படி நுகர்ந்தாய்?” என்ற கேள்விக்கு தலைவி பதில் சொல்வதாக காட்சி அமைகிறது. ” தோழீ வாழி நீ! நம் தோட்டத்து தேன் கலந்த பாலினும் இனியது என் தலைவன் ஊரில் தழைகள் மண்டிக்கிடக்கும் கிணற்றில் மான் போன்ற விலங்குகள் உண்டு எஞ்சிய கலங்கிய நீரே!” என்று தலைவி பதில் சொல்வதாகக் காட்சி அமைகிறது. சாதாரணமான, கேள்வி, சாதரணமான பதில் என்று தோன்றும்! ஆனால் இலக்கிய நயத்துடன் இதைச் சற்று நோக்கினால் இன்று நம்மால் அனுபவிக்க முடியாத ஓர் பேரின்பக்காட்சியை கபிலர் விவரிப்பது புரியும்!
தமிழ் மறைமொழியாக பயில்வதும் புரியும். தலைவனிடம் களவொழுங்காகத் தலைவி போய் வருகிறாள் என்பதறிந்து அவளிடம் நீர் நிலைகள் சுவையாக இருந்தனவா? எனக்கேட்க தோழி கிழவி இல்லை. இரண்டும் பருவச்சிட்டுகள். இங்கு நீர்நிலை என்பது ஒட்டி உறவாடும் போது உருண்டு, திரண்டு, உமிழ்ந்து, சுவைத்து வெளிவரும் நீர்நிலை பற்றியது. தலைவியாவது நேரிடையாகப் பதில் சொல்கிறாளா பாருங்கள்? தங்கள் வீட்டில் தாய் தரும் பால், வீட்டிற்கு வந்து சேரும் மலைத்தேன் இவையெல்லாவற்றையும் விட விலங்குகள் கூடி முயன்ற கலிழி நீர் சுவையாக இருந்தது என்கிறாள். அதாவது தலைவனைக் கண்டு, அவனுடன் இன்புற்றிருந்த பொழுதுகள், சுத்தமானதாக இல்லாவிடினும் சுவையாக இருந்தது என்கிறாள்.
இயற்கையுடன் இயைந்த வாழ்வு. இயற்கையே உவமையாகும் வாழ்வு. இயற்கைச் சேர்க்கை போல் பிணைந்து மகிழ்வுறும் வாழ்வு. எல்லாமே பரந்த வெளியில், பட்டவர்த்தனமாக. கட்டுப்பாடுகள் நிரம்பி, தனிமை என்பதே என்னவென்று அறியமுடியாத ஒரு வாழ்வு முறையில் சங்க வாழ்வை நினைத்து ‘சப்புக் கொட்டதான்’ முடிகிறது. அதுவே சங்கத்தின் ஈர்ப்பு என்றும் தோன்றுகிறது.
ஆனால் இந்தச் சங்கச்சுவை. அகத்தின் நெருக்கம், இணக்கம், சுணக்கம் (ஊடல்), நேர்மொழியாக இல்லாமல் மறைமொழியாகச் சொல்வது இவையே இன்று தமிழின் மிகப்பெரிய வளமாக உள்ள பக்தி இலக்கியத்திற்கு வித்திட்டது என்றால் பலர் வியக்கக்கூடும். இளங்கோ அடிகள் வடித்த சிலப்பதிகாரத்தில் மனையறம்படுத்த காதையில் ஓர் காட்சி. கோவலன் காதல் பெருக்கால் கண்ணகியைப் பலவாறாகப் புகழ்கிறான்
மாசு அறு பொன்னே! வலம்புரி முத்தே!
காசு அறு விரையே! கரும்பே! தேனே!
அரும் பெறல் பாவாய்! ஆர் உயிர் மருந்தே!
பெருங்குடி வாணிகன் பெரு மட மகளே!
மலையிடைப் பிறவா மணியே என்கோ?
அலையிடைப் பிறவா அமிழ்தே என்கோ?
யாழிடைப் பிறவா? இசையே என்கோ?
திருப்பாற்கடல் கடைந்த போது அமுது கிடைத்தது. ஆனால் கண்ணகி எனும் அமுது அப்படிக் கடல் கடைந்து கிடைத்தது அன்று. யாழ் மீட்டினால் இசையுண்டாகும். ஆனால் யாழ் மீட்டாத இசை என் கண்ணகி என்கிறான். இப்படி “என்கோ” என்று வியந்து சாகிறான். அப்படியே சில நூற்றாண்டுகளுக்குப் பின்னால் வரும் இலக்கியத்திற்கு வாருங்கள்!
சாதிமா ணிக்கம் என்கோ?
சவிகோள்பொன் முத்தம் என்கோ?
சாதிநல் வயிரம் என்கோ?
தவிவில்சீர் விளக்கம் என்கோ?
ஆதியஞ் சோதி என்கோ?
ஆதியம் புருடன் என்கோ?
ஆதுமில் காலத் தெந்தை
அச்சுதன் அமல னையே!
அதே சங்கக்காதல்தான். அதே அடைமொழிகள்தான். ஆனால் பாடுபொருள் மட்டும் மாறிவிடுகிறது! இதன் வளர்ச்சியை இன்னும் கவனிப்போம்!
யாரும் இல்லை; தானே கள்வன்;
தான் அது பொய்ப்பின், யான் எவன் செய்கோ?
தினை தாள் அன்ன சிறு பசுங் கால
ஒழுகு நீர் ஆரல் பார்க்கும்
குருகும் உண்டு, தான் மணந்த ஞான்றே!!
குறுந்தொகையில் கபிலர் பாடியதாக வருகிறது இப்பாடல். இதற்கு தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதய்யர் அளித்த உரை:
“தோழி , தான் மணந்த ஞான்று – தலைவன் என்னைக் களவில் மணந்த காலத்தில், யாரும் இல்லை – சான்றாவார் வேறு ஒருவரும் இலர்; தானே கள்வன் – தலைவனாகிய கள்வன் ஒருவன்றான் இருந்தனன்; தான் அது பொய்ப்பின் – அங்ஙனம் இருந்த தலைவன் அப்பொழுது கூறிய சூளுறவினின்றும் தப்பினால், யான் எவன் செய்கு- நான் யாது செய்ய வல்லேன்! ஒழுகு நீர்ஆரல் பார்க்கும் – ஓடுகின்ற நீரில் ஆரல் மீனின் வரவை உண்ணும் பொருட்டுப் பார்த்து நிற்கும், தினைதாள் அன்ன- தினையின் அடியைப் போன்ற, சிறு பசு கால – சிறிய பசிய கால்களை உடைய,
குருகும் உண்டு – நாரையும்”
இதுவொரு கையறுநிலை! பெண் தன்னை இழந்துவிட்டாள். அதைச் செய்தவன் கள்வன். இவள் உள்ளத்தையும், உடலையும் களவாடிவிட்டவன். முறையாகத்திருமணம் என்று ஒன்று நடந்தால் பலபேர் சாட்சியாக இருப்பர். ஆனால், இங்கோ சாட்சிக்கு ஆளே இல்லை. ஒரே ஒரு கொக்கு அங்கு இருந்தது. அதுகூட ஆற்றிலோடும் மீனைப்பார்த்துக்கொண்டு இருந்துவிட்டது! என்கிறது பாடல். இதுவொரு private moment! யாருமே காணாத காட்சி. லைவனுக்கும், தலைவிக்கும் மட்டும் அந்நியோன்யமாக நடந்த ஓர் நிகழ்வு. உண்மையில் இதற்கு யாரை சாட்சிக்கு இழுக்க முடியும்? இந்த மிக அழகிய அகநிலையை அப்படியே எடுத்துக் கையாள்கின்றனர் ஆழ்வார்கள்.
இறை அனுபவம் என்பதும், கலவி என்பதும் தன்மையால் ஒன்றுதான். யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாது. நெஞ்சத்தை அள்ளிக்கொண்டு போன கள்வன் என்று மட்டும்தான் செல்லமாகக் குறைகூறமுடியும். இதுவொரு மறை செயல். இதை வெட்டவெளிச்சமாக்க முடியாதலால் உபயோகப்படும் மொழியும் ‘மறைமொழி’. இந்தச் சரிசம விகிதம் அப்படியே மானுடக்காதலிலிருந்து இறைக்காதலுக்கு உருமாற்றம் கொள்கிறது. நம்மாழ்வார் அருளிச் செய்த திருவாய்மொழி அப்படியே சங்கக்காட்சியாக அமைகிறது. அதே கலவி, அதே காட்சி, அதே மறைமொழி. ஆனால் ஸ்தூலமான உடற்சேர்க்கையிலிருந்து இடம்மாறி ஒரு transcendental நிலையைச் சொல்வதாக மாற்றமுறுகிறது!
இனியிருந் தென்னுயிர் காக்கு மாறென்?
இணைமுலை நமுகநுண் ணிடைநு டங்க,
துனியிருங் கலவிசெய் தாகம் தோய்ந்து
துறந்தெம்மை யிட்டகல் கண்ணன் கள்வன்,
தனியிளஞ் சிங்கமெம் மாயன் வாரான்;
தாமரைக் கண்ணும்செவ் வாயும்,நீலப்
பனியிருங் குழல்களும் நான்கு தோளும்
பாவியேன் மனத்தேநின் றீரு மாலோ!
இனி இருந்து என்னுயிரை காத்துக்கொள்ளும் வகை என்ன? முலைகள் இரண்டும் குழையும் படியாகவும், நுண்ணிய இடை நுடங்கும் படியாகவும், எப்போதும் நினைத்து ஏக்கம் கொள்ளத்தக்க கலவியை செய்துவிட்டு, நீங்கிய என் தலைவன் கள்வனே! அவனது தாமரை போன்ற இரு கண்களும், சிவந்த வாயும், கரிய குளிர்ந்த பெரிய திருக்குழலும், நான்கு திருத்தோள்களும் தீவினையேனாகிய என்னுடைய மனத்திலே நிலை பெற்று ஈராநிற்கின்றன என்கிறார் நம்மாழ்வார். புறத்தே பார்த்தால் சங்கப்பாடல்கள் போலவே இதுவும் சாதாரணமாகத் தோன்றும். மறைபொருளை நுணுக்கி அணுகினாலன்றி உட்பொருள் காணவியலாது.
ஏன் நேரிடையாகச் சொல்லாமல் மறைமொழியாகச் சொல்ல வேண்டும்? காரணமிருக்கிறது.
நாம் பார்க்கின்ற எல்லாப்பொருட்களுமே இருநிலைக்காட்சிகளே! உதாரணமாக ஒரு மனிதனைப் பார்க்கும் போது ஓருரு மட்டும் தெரிந்தாலும் அவனை இயக்கும் சூட்சும சைதன்யமென்பது மறைபொருளாக உள்ளது. ஓடும் ரயிலைப் பார்க்கும் போது ஒன்றுதான் தெரிந்தாலும் அதனை இயக்கும் நீராவி எஞ்சின் அல்லது டீசல் எஞ்சின் உள்ளே மறைந்து இருக்கிறது. பூவின் அழகு வெளியே வெளிப்படையாய் தெரிந்தாலும், பூவின் ரகசியம் அறிவியல் அறிந்தோருக்கே புலப்படுகிறது. இந்த அடிப்படை சித்தாந்தத்தை உள்வாங்கியதே தமிழ் மொழி. தமிழ் மொழி இயற்கையிலேயே மறைமொழியாக உள்ளது. இப்படிப் பேசுவதால் ஒரே காதலைக் காலம் காலமாக பல்வேறு வகையில் சொல்லி ஆனந்திக்கமுடிகிறது. அதை விடுத்து நேரடியாகச் சொல்லப்புக்கால் ஒரேயொருமுறை, ஒரேயொரு காலத்தில், ஒரேயொரு வகையில்தான் சொல்லி வைக்க முடியும்!
எதையும் நேரடியாகச் சொல்வது தமிழ் வழி அல்ல. காதலென்று வரும் போது கூடுதலாகவே சங்கேத மொழி ஊடாடுகிறது. இல்லையெனில் அன்றையக் கபிலரிலிருந்து இன்றைய வைரமுத்துவரை பாடல்கள் இயற்றிக் கொண்டு இருக்க முடியாது. எப்படி திரும்பத் திரும்ப காதல் மொழி எழுதுகிறார்கள் என்று யோசிப்பதுண்டு. சங்கேதம் இருப்பதால் கூட்டிக் கழித்து – permutation and combination போட்டு எழுதிக் கொண்டே இருக்க முடிகிறது. கருவுற்றால் அவள் “முழுகாமல் இருக்கிறாள்”. குழந்தை பெற்றுவிட்டால் “பச்சை உடம்புக்காரி”. அவனோ “கணக்கிலே புலி!” காலைக்கடன் கழிக்கப் போனால் “வெளிக்குப் போயிருக்கிறார்”. “காலைக்கழுவிட்டு வா” என்றால் காலை மட்டுமென்றில்லை! சுண்ணாம்பு எடு! என்று சொல்ல மாட்டார்கள், “மூன்றாவது எடுத்துவா!” என்பார்கள் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இம்மொழியின் நேரடிப்பொருளைப் பார்த்தால் செய்கைக்கும் மொழிக்கும் சம்மந்தமே இருக்காது. இது சங்கத்தில் ஆரம்பிக்கிறது!
எனவே இதன் இயல்பான வளர்ச்சியாய் பக்தி இலக்கியம் அகமொழியை தன்னுள் வாங்கிக்கொள்கிறது. மேலும் அகம் எனது மென்மையானது, மிக்க உணர்வுடையது (sensitive), நோவு கண்டு வாடுவது, கூடுதலை வேண்டுவது, பிரிதலை வெறுப்பது, உறவை வளர்ப்பது. இப்படி மானுட மேன்மைக்கு வித்தாக அமைகிறது அகத்திணை. இப்பண்புகளை மனிதனிடம் வளர்தெடுத்தால் அவன் வாழ்வு இயற்கையோடு இயைந்து, உறவுடன் கலந்து, மெய்யுணர்வூட்டி, வற்றாத காதலில் நிற்கவைத்து அவனை அமரனாக்கிவிடும் என்று தமிழ் ஞானிகளும் யோகிகளும் கண்டனர். எனவேதான் அகம், புறம் என்ற இரண்டு வழிகள் இருந்தாலும் புறத்தை விட்டு, அகத்திணையை வளர்த்தெடுத்தனர் தமிழர்கள். இதற்கு உறுதுணையாக தமிழ் மொழி மறைமொழியாக அமைவதால், வேறு மொழிகளில் காணக்கிடைக்காத அளவு “பக்தி இலக்கியம்” என்பது தமிழ் மொழியில் மட்டும் கிடைக்கிறது!
சங்கத்தமிழை உள்வாங்கிக்கொள்ளும் போதுதான் தெரிகிறது, தமிழின் சீரிளிமைத்திறம் எப்படி இன்றளவும் நிற்கிறது என்று. சங்கம் கற்றால்தான் தெரிகிறது, பக்தியின் வேர்கள் எங்குள்ளன என்று. சங்கம் கற்றால்தான் தெரிகிறது சித்தர் பாடல்களில் தெறிக்கும் யதார்த்தமும், கைவிட்ட நிலையும் எங்கிருந்து வருகிறது என்று (http://emadal.blogspot.com/2008/08/blog-post_10.html). உண்மையைச் சொல்லப்போனால் சங்கம் அறிந்தால்தான் தமிழையே அறிய முடிகிறது!
**************************
சங்கத்தமிழுக்கும் பக்தி இலக்கியத்திற்குமுள்ள தொடர்பு பல்வேறு கட்டுரைகளில் ஆழ்வார்க்கடியான் வலைப்பதிவில் காணக்கிடைக்கிறது.
———————————————————————————————————————————————————————————————————————————————————-
Further Reading:
Dr.Kannan’s Blogs,
Alwar – a blog in Tamil Unicode (commentaries on ‘nAlAyira divyap pirabantham’)
Alwarkadiyan – commentaries on ‘nAlAyira divyap pirabantham’
The Third Eye – photo blog (photo journal)
Tirumandiram- a Saivite book of medieval times with deep insight into science, philosophy and religion. –http://www.subaonline.de/siddha/sid/tthodar.htm
———————————————————————————————————————————————————–

Please post your comments.

Link to my orkut community http://www.orkut.com/Community.aspx?cmm=49797549

Subscribe Karkanirka

Digg!

Stumble It!


Top Blogs

5 Comments

  1. மிகவும் அருமையாக இருந்தது !!! தமிழ் ஒரு வற்றாத நதி என்னும் உண்மை புலனாகிறது !!! உங்கள் தமிழ் சேவை தொடரடும் ,,,, வாழ்த்துக்கள் !!!

  2. அருமையான ஒப்பீடு ஐயா. காதல் என்ற கருப்பொருளை எடுத்துக் கொண்டதால் பரிபாடலைச் சொல்லாமல் விட்டீர்கள் போலும்.

  3. பயனுள்ளதாகவும் தமிழின் இனிமையை விவரிப்பதாகவும் இருந்தது.
    மிக்க நன்றி

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.